உலகப் புத்தக நாளைக் கொண்டாடுவதன் வாயிலாக, இளம் தலைமுறையினரிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைத் தூண்டும் வகையில் 2013ஆம் ஆண்டு முதல் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், “சென்னை புத்தகச் சங்கமம்” எனும் பெயரில் மாபெரும் புத்தகக் காட்சியைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.
புத்தக அரங்குகள்
ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகளைக் கொண்டு நடத்தப்படும் சென்னை புத்தகச் சங்கமத்தின் ‘புத்தகக் காட்சியில்’ தமிழகத்தின் புகழ்பெற்ற பதிப்பகங்கள் - விற்பனைக் கூடங்கள், பிற மாநிலங்களின் பதிப்பகங்கள் தங்களது அனைத்து வகையான புத்தகங்களையும் (தமிழ், பிற மொழி) காட்சிப்படுத்தி விற்பனை செய்து வருகின்றன.
கடந்த நான்கு ஆண்டுகளாக (2013 - 2016) நடைபெற்ற புத்தகக் காட்சிகளை முறையே தென்னிந்தியாவிற்கான ரஷ்யத் தூதர் நிக்கோலய் அவிஸ்தபதோவ், ரஷ்யத் தூதர் செர்கி எல்.கோடோவ், மலேசியத் தூதர் சித்ராதேவி ராமய்யா, இந்திய அளவில் புகழ்பெற்ற வரியியல் வல்லுநர் ச.இராசரத்தினம், நேஷனல் புக் டிரஸ்ட்டின் இயக்குநர் எம்.ஏ.சிக்கந்தர், தென்னிந்தியப் புத்தக பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் சங்க (BAPASI) நிர்வாகிகள் உள்ளிட்டவர்கள் தொடக்க விழாவில் பங்கேற்று துவக்கி வைத்துச் சிறப்பித்துள்ளார்கள்.
நாள்தோறும் புத்தாக்க உரை
மாலை நேரத்தில், பிரபல கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து சான்றோர்களின் புத்தாக்க உரை நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதில், கவிஞர் வாலி, இயக்குநர் சமுத்திரக்கனி, இயக்குநர் சீனு ராமசாமி, திரைப்பட நடிகர் விவேக், Rtn.ராஜா சீனீவாசன், திரு.வி.கே.டி.பாலன், கவிஞர் மனுஷ்ய புத்திரன், எழுத்தாளர் வெ.இறையன்பு அய்.ஏ.எஸ்., கவிஞர் ஈரோடு தமிழன்பன், கவிஞர் நந்ததலாலா, நக்கீரன் கோபால், த.ஸ்டாலின் குணசேகரன், அருட்தந்தை ஜெகத் கஸ்பர், திரு அபிராமி ராமநாதன், பாவலர் அறிவுமதி, ஓவியர் டிராட்ஸ்கி மருது, ஆசிரியர் கி.வீரமணி, ,இலக்கிய தென்றல் பழ.கருப்பையா, இலக்கிய செல்வர் குமரி அனந்தன், டாக்டர் அவ்வை நடராஜன், பேரா.சுப.வீரபாண்டியன், உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்று புத்தாக்க உரை நிகழ்த்தியுள்ளனர்.
புத்தகர் விருது
புத்தகங்களைப் பாதுகாப்பதிலும், வாசிப்புப் பழக்கத்தை மக்களிடையே கொண்டு செல்வதிலும் உந்து சக்தியாக இருக்கும் பெருமக்களைப் பாராட்டி ஒவ்வோர் ஆண்டும் ‘புத்தகர் விருது’ வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில் திருவாளர்கள் என்.பழனி (ஈஸ்வரி வாடகை நூலகம்), வி.கிருஷ்ணமூர்த்தி (ஞானாலயா நூலகம்), நம்மாழ்வார் (எ) தாமஸ் (அரிய புத்தகங்கள் விற்பனையாளர்), கு.மகாலிங்கம் (காந்தி புத்தகம் நிலையம்), சாமி.மாணிக்கம் (தமிழ் நூற் காப்பகம்), பொள்ளாச்சி நசன், பழங்காசு ப.சீவானந்தம், தி.மா.சரவணன், புத்தகத் தாத்தா சண்முகவேல், ‘பாலம்’ கல்யாணசுந்தரம், த.ஸ்டாலின்குணசேகரன், ‘வானதி’ ராமநாதன், மதுரை முருகேசன், ‘நூல்’ பாண்டியன், திருச்சி பட்டாபிராமன், சென்னை என்.ஆறுமுகம் உள்ளிட்ட புத்தக ஆர்வலர்களுக்கு புத்தகர் விருதுகளை வழங்கி சிறப்பித்துள்ளோம்.
புத்தகக் கொடை விழா
இப்புத்தகச் சங்கமத்தில் புத்தக வங்கி ஏற்படுத்தி, வாசகர்கள் ஏற்கெனவே வாங்கிப் படித்த புத்தகங்களை அடுத்த தலைமுறைக்குத் தந்து உதவும் பண்பை வளர்க்கும் நோக்குடன் சேகரித்து, அவற்றைப் பல்வேறு சிற்றூர்களில் செயல்படும் பள்ளிக்கூடங்களுக்குத் தொடர்ந்து வழங்கி வருகிறோம். இவ்வாண்டும் புத்தக வங்கி திட்டத்திற்கான அரங்கம் அமைக்கப்பட்டு, புத்தகங்களை கொடையளிப்பவர்களுக்கு 'புத்தகக் கொடைஞர்' என்ற சான்றிதழ் வழங்கப்படுகிறது.